இறை ஊழியர் லூயி மரி லெவே

அருளாளர் பட்டம் நோக்கி…

தொடங்கிய சூழல்:
சிவகங்கை மறைமாவட்டம் சருகணி பங்கு ஆலய வளாகத்தில் துயில் கொள்ளும் இறைஊழியர் லூயி லெவே இறைமக்களால் ‘புனித குரு’வாகப் போற்றப்படுகிறார். இறைமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று சருகணிப் பங்குப்பணியாளர் டு. அம்புரோஸ் லூயிஸ் மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சூசைமாணிக்கம் அவர்களிடம் தந்தை லெவே அவர்களுக்கு புனிதர் பட்டத் திருப்பணியைத் தொடங்க ஆவண செய்யுமாறு 2015 நவம்பர் 1-ஆம் தேதி அனைத்துப் புனிதர்களின் பெருவிழா அன்று விண்ணப்பித்தார்.

முறையான அறிவிப்பு:
மேதகு ஆயர் இறைமக்களின் பல்லாண்டு கால வேண்டுகோளை ஏற்று, மறைமாவட்ட அளவில் பல கலந்தாய்வுக் கூடங்களை நடத்தி, 2015 நவம்பர் 11-ஆம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழா அன்று புனிதர் பட்டத் திருப்பணிக்கான வேண்டுகையாளரை (Postulator) நியமித்தார். மறைமாவட்ட அளவில் புனிதர் பட்டத் திருப்பணித் தொடக்கம் பற்றிய அதிகாரப் பூர்வமான அறிவிப்பை மேதகு ஆயர் அவர்கள் 2015 டிசம்பர் மாதம் வெளியிட்டார்.

தமிழக ஆயர் பேரவையின் ஓப்புதல்:
எமது ஆயர் அவர்கள் இறை ஊழியர் லூயி லெவே புனிதர் பட்டத் திருப்பணியை மறைமாவட்ட அளவில் தொடர 2016 ஜனவரி 14-ஆம் தேதியன்று தமிழக ஆயர் பேரவையின் ஒப்புதலைக் கேட்டு அதன் தலைவரிடம் விண்ணப்பித்தார். தமிழக ஆயர் பேரவையின் ஒப்புதல் (Nihil Obstat) 2016 மார்ச் 29-ஆம் தேதியன்று தற்போதைய தலைவர் மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர், மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்களால் வழங்கப் பட்டுள்ளது.

ஆவணங்கள் தயாரிப்பு:
உரோமை புனிதர் பட்டத் திருப்பணிப் பேராயத்தின் விதிமுறைகளின்படி இறை ஊழியர் லெவே அவர்களது வாழ்வு, பணி மற்றும் நற்பண்புகள் பற்றிய அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டன. வேண்டுகையாளர் இறை ஊழியர் லெவேயின் பணித்தளங்கள், அவர் பற்றிய நூல்கள், அவர் எழுதிய கடிதங்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்து தேவையான ஆவணங்களை முறைப்படித் தொகுத்தார்.

உரோமைக்கு விண்ணப்பம்:
சிவகங்கை ஆயர் அவர்கள் இறை ஊழியர் லெவேயின் சாட்சிகளை விசாரிக்கும் பணியைத் தொடங்கவும், அவரது வாழ்வைப் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொள்ளவும் உரோமைப் புனிதர் பட்டத் திருப்பணிப் பேராயத்தின் ஒப்புதலைக் கேட்டு 2015 ஏப்ரல் 2-ஆம் தேதி விண்ணப்பித்தார். இறை ஊழியர் லெவே அவர்களின் வாழ்வு மற்றும் நற்பண்புகள் பற்றித் தயாரிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் விண்ணப்பத்தோடு சமர்ப்பிக்கப்பட்டன.

நேரடி சாட்சிகளின் விசாரணை:
இறை ஊழியர் லெவே அவர்களை நேரடியாகச் சந்தித்த அனுபவமுள்ள பலர் மிகவும் வயது முதிர்ந்தவர்களாகவும், நோயாளிகளாகவும் இருக்கின்றார்கள். எனவே, உரோமைப் பேராயத்தின் சிறப்பு விதிமுறைகளின்படி (“lest proofs be lost” in Article 82, Sanctorum Mater) மேதகு ஆயர் அவர்கள் 20 ஜூன் 2016 மறைமாவட்ட விசாரணைக் குழுவை ஏற்படுத்தினார். மறைமாவட்ட விசாரணைக் குழு இறை ஊழியர் லெவே அவர்களின் நேரடி அனுபவமுள்ளவர்களில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மிகவும் உடல்நலமற்றோரில் 29 பேரை ஆறு மையங்களில் ஜூலை மாதத்தில் விசாரித்து அவர்களின் சாட்சியங்களை ஆவணப் படுத்தியுள்ளது.

திருஅவையின் ஒப்புதல்:
இறை ஊழியர் லெவே அவர்களின் வாழ்வு மற்றும் நற்பண்புகளை ஆய்வு செய்து உரோமைப் பேராயம் அவரை “இறை ஊழியர்” என்று அங்கீகரித்து, அருளாளர் பட்டத் தயாரிப்புப் பணிகளைத் தொடங்க 2016 ஆகஸ்டு 9-ஆம் நாள் தடையில்லா சான்று (Nihil Obstat) வழங்கியுள்ளது. உரோமைப் புனிதர் பட்டத் திருப்பணிப் பேராயத்தின் அங்கீகாரம் கிடைத்ததை அறிந்து சிவகங்கை மறைமாவட்டத் தலத்திருச்சபை பெருமகிழ்ச்சி அடைகிறது.

அருளாளர் பட்டத் தயாரிப்புப் பணிகள்:
இறை ஊழியர் லெவே திருஅவையால் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படத் தொடக்க நிகழ்வாக அவரது கல்லறை அமைந்திருக்கின்ற சருகணியில் 2016 அக்;டோபர் 2-ஆம் நாள் மேதகு ஆயர் அவர்கள் தலைமையில் தயாரிப்புப் பணிகளின் முதல் அமர்வு நடைபெற்றது. இறை ஊழியர் லெவேயின் வாழ்வும், பணியும் பற்றிய முழுமையான ஆய்வும், சாட்சிகளின் விசாரணையும் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன.
“ஏழைகளின் தோழர்” என்று போற்றப்படும் இறை ஊழியர் லூயி லெவே விரைவில் திருஅவையால் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட இறைவனிடம் மன்றாடுங்கள். தந்தை லெவே வழியாக உங்களது விண்ணப்பங்களை நம்பிக்கையோடு சமர்ப்பியுங்கள்.

உங்களின் பங்களிப்பு:
1) இறை ஊழியர் லெவே எழுதிய கடிதமோ, கொடுத்த பொருளோ உங்களிடம் இருந்தால் சிவகங்கை ஆயர் இல்லத்திற்கு அனுப்பிவையுங்கள்.
2) தந்தை லெவேயின் நேரடி அனுபவமுள்ளவர்கள், அவர் வழியாகச் செபித்து நன்மை அடைந்தவர்கள் தங்கள் சாட்சியங்களை எழுதி அனுப்புங்கள்.
3) புனிதர் பட்டத் திருப்பணிக்குத் தேவையான பொருளுதவியைத் தாராள உள்ளத்தோடு கொடுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி
வேண்டுகையாளர்
ஆயர் இல்லம், பிரிட்டோ நகர்
மேலூர் சாலை, சிவகங்கை- 630 561
அலைபேசி: +9196988 40484
மின்னஞ்சல்: postulatorsvg@gmail.com

இறைபணியில்
பணி. S. ஜேம்ஸ் அந்துவான் தாஸ்
வேண்டுகையாளர்

இறை ஊழியர் லெவே அவர்களின் அரிய படங்கள்:

bp-ed-leve

leve-new-photo

leveil-wrkd-photo